மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம்: நில உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மேட்டுப்பாளையத்தில் 20 அடி சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் நில உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ம் தேதி மேட்டுப்பாளையத்தில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து சுற்றுச்சுவர் எழுப்பிய நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அச்சமயம் மாநிலம் முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் எனவும், பலியான குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் அந்த சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா? சுற்றுச்சுவர் கட்டப்பட்ட போது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் எழுப்ப கூடாது என விதிகள் இருந்ததா? சுற்றுச்சுவர் கட்டப்படுவது தொடர்பாக என்னென்ன விதிகள் உள்ளது? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த வழக்கில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: