×

முதியோர், பெற்றோரை துன்புறுத்தினால் 6 மாத சிறை: மக்களவையில் சட்டதிருத்த மசோதா அறிமுகம்

புதுடெல்லி: தங்கள் பராமரிப்பில் உள்ள பெற்றோர் அல்லது முதியோர்களை துன்புறுத்தும் நபர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளிக்கும் வகையிலான புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா-2019’ நேற்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட இந்த மசோதாவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் அவையில் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தங்கள் பராமரிப்பில் உள்ள பெற்றோர் அல்லது முதியோரை துன்புறுத்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்க வகை செய்யும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதியோரை திட்டுதல், பணம் தராமல் துன்புறுத்துதல், முதியோரை கைவிடுதல், புறக்கணித்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உடல் ரீதியான மற்றும் மனரீதியாக பாதிப்பு ஏற்படுத்துதல் என துன்புறுத்தல் பல வகையாக வகைப்படுத்தப்படுகிறது.

பெற்றோரின் குழந்தைகள் அல்லது முதியோரின் குழந்தைகள் என அவர்களது மகன், மகள், வளர்ப்பு குழந்தை, மருமகன், மருமகள், பேரன், பேத்தி உள்ளிட்டோர் வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த மசோதாவின் படி முதியோர் தங்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் உதவிகளை பெற தீர்ப்பாயத்தை நாடி புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் தரும் புகார்களை 60 நாட்களுக்குள் தீர்ப்பாயங்கள் மூலம் தீர்வு காணவும் வகை செய்கிறது. 80 வயதுக்கு குறைவான பெற்றோர் அல்லது முதியோரின் புகார்களுக்கு 90 நாட்களுக்குள் தீர்ப்பாயம் தீர்வு காண வேண்டும். இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோரின் நலத்திற்காக சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்படும். இந்த பிரிவு தலைவராக டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி நியமிக்கப்படுவார்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : parents ,Lok Sabha ,Introduction ,jail , 6 months jail, Lok Sabha bill bill , aging parents
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...