22வது வார்டு காவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், 22வது வார்டு புழல், காவாங்கரை பகுதி சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடப்பாளையம், சக்திவேல் நகர், மகாவிர் கார்டன், மெர்சி நகர், தமிழன் நகர், திருநீலகண்ட நகர், காஞ்சி அருள் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர் பகுதியில் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை பணி இதுவரை துவங்கப்படாததால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக, காவாங்கரை தனியார் மீன் மார்க்கெட்டில் சேரும் கழிவுகள் அங்குள்ள தொட்டியில் இருந்து வெளியேறி ஜிஎன்டி சாலையின் சர்வீஸ் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு கழிவுநீரை தாண்டி கடந்து செல்கிற அவல நிலை உள்ளது.

லேசான காற்று அடித்தால் கூட ஜிஎன்டி சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட காவாங்கரை மீன் மார்க்கெட்டிற்கு சென்று வியாபாரிகளிடம் கூறினாலும் அவர்கள் உரிய பதில் சொல்லாமல் கழிவுநீரை சாலைகளில் தொடர்ந்து விட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 22வது வார்டு மற்றும் மாதவரம் மண்டலம் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுநல சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புழல் பேரூராட்சி  தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக வந்த பிறகும் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

இதனால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மீன் மார்க்கெட், மீன் வளர்ப்பு அங்காடிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சேரும் கழிவுகள் தெருக்கள் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி குளம்போல் உள்ளது. இதனால் பல்வேறு நோய் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே இனியாவது சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தொடங்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளை துவங்க வேண்டும். இல்லையெனில் மாதாவரம் மண்டல அலுவலகம் முன் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

Related Stories: