உச்ச நீதிமன்ற ஆணையின்படி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஏற்கனவே 9.12.19 நாளிட்ட அறிவிக்கைகளிலுள்ள  தேர்தல் அட்டவணையின்படியே, எவ்வித மாற்றமுமின்றி தேர்தல் நடைமுறைகள்  கடைபிடிக்கப்பட்டு நிறைவடையும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால், மாநில மற்றும் மாவட்ட அரசிதழ்களில் 9.12.19 நாளிட்ட அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. மேற்படி தேர்தலில் வார்டு மறுவரையறை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவியிடங்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றை பொறுத்தவரை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் 11.12.19 அன்று வழங்கிய தீர்ப்பில், நடைபெற உள்ள தேர்தல்கள் அனைத்தும் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டுகளின் மறுவரையறை மற்றும் மேற்படி வார்டு உறுப்பினர், இதர பதவியிடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த அரசின் அறிவிக்கைகள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஏற்கனவே 9.12.19 நாளிட்ட அறிவிக்கைகளிலுள்ள தேர்தல் அட்டவணையின்படியே, எவ்வித மாற்றமுமின்றி தேர்தல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு நிறைவடையும்.

Related Stories: