பாரபட்சம் காட்டும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தமிழக எம்பிக்கள் எதிர்க்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: பாரபட்சம் காட்டும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தமிழக எம்பிக்கள் எதிர்க்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. இது மதரீதியான பாரபட்சம் ஆகும். இந்த மூன்று நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களும் கொடுங்கோன்மைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை இம்மசோதா கவனத்தில் கொள்ளாது மற்றொரு பாரபட்சம் ஆகும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான. மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகிற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும்.

வி.எம்.எஸ்.முஸ்தபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்):  பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. நாட்டில் பொருளாதார சீரழிவு, வேலையின்மை, தொழிற்சாலைகள் மூடல், அனைத்து துறைகளிலும் தோல்வி என நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் சந்தித்திராத பல்வேறு இன்னல்களை நாடு சந்தித்து கொண்டு உள்ளது. வளர்ச்சி பாதையில் இருந்து விலகி நாடு சரிவு நோக்கி சென்று கொண்டிருப்பதை மறைத்து மக்களை திசை திருப்பும் நோக்கில் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆகவே நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் மத்திய அரசு கொண்டு வர உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஜனநாயகத்தை காக்க உதவிட வேண்டும்.

Related Stories: