கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை: கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயதான பள்ளி மாணவி கடந்த 26ம் தேதி இரவு 8 மணியளவில் அப்பகுதி பூங்காவில் தனது காதலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீசார் எனக்கூறி மிரட்டி காதலனை தாக்கினர். பின்னர் அந்த பூங்காவுக்கு பின் பகுதியில் இருக்கும் ஓடைக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சிறுமியைத் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை அந்த கும்பலில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். இதுகுறித்து மாணவியின் தாய், கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகிய 4 பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மணிகண்டன்(32) கடந்த 3ம் தேதி மதியம் கோவை மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான மணிகண்டனை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது, நீதிபதி பானுமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பப்ஸ் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>