கிண்டி பாம்பு பண்ணையில் தாவரங்கள், விலங்குகள் பற்றி தெரிந்துகொள்ள சிறப்பு முகாம்

சென்னை: கிண்டி பாம்பு பண்ணை சார்பில் தாவரம் மற்றும் விலங்கின வகை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர்கள், பொதுமக்களை வனபகுதிகளுக்கு அழைத்து சென்று விழிப்புர்ணவு ஏற்படுத்தும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும் என்று பாம்பு பண்ணை அதிகாரி சிவகணேசன் கூறினார். இது குறித்து பாம்பு பண்ணை அதிகாரி சிவகணேசன் கூறியதாவது: பாம்பு பண்ணையில் இன்டர்பேரடைஷன் துவக்கப்பட்டுள்ளது. பாம்பு கடியின் மருத்துவம், அதன் வாழ்க்கை முறை, பாம்புகளை பற்றிய அடிப்படை தகவல்கள், பாம்புகளின் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் 120 எல்.இ.டி மூலம் தகவல் பலகைகளில் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு விஷமுள்ள, விஷமற்ற பாம்புகளை எடுத்து காட்டி அதன் அடிப்படை தகவல்களையும், பாம்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி தினமும் காலை 11 மணி முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ஆடியோ ரிக்கார்டு மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு செயல் விளக்க முறை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வை அளிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாதத்திற்கு 60 பள்ளிகளை தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும் பாம்புகள், மூலிகை தாவரங்கள் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் நன்மங்கலம், போன்ற வனப்பகுதிளுக்கு நேரிடையாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து சென்று அவர்களுக்கு அனைத்து தாவரம் மற்றும் விலங்கினங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதைப்போன்று பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை போன்று பொதுமக்களையும் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து  கொள்பவர்கள் ₹400 செலுத்தினால் அவர்களை நாங்களே அழைத்து சென்று அவர்களுக்கு பாம்புகள், வனவிலங்குகள்,ஊர்வன ஆகியவை பற்றி விளக்கம் அளிக்கப்படும். மேலும், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் விலங்கியல் பட்டப்படிப்புக்கான ஆய்வுக் கட்டுரைகள் உட்பட 2,000 நூல்கள் கொண்ட நூலகம் இங்கு அமைந்துள்ளது. இவ்வாறு சிவகணேசன் கூறினார்.

Related Stories: