ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு கடக்கிறதாம்... தொப்பூர் கணவாயில் தொடரும் விபத்துகள் பேய் பீதி கிளப்பும் உள்ளூர் டிரைவர்கள்: அதிகாரிகள் விளக்கம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வனப்பகுதியில், அடிக்கடி நடக்கும் விபத்தகளுக்கு பேய் நடமாட்டம்தான் காரணம் என உள்ளூர் டிரைவர்கள் கிலி கிளப்பி விட்டுள்ளனர். தர்மபுரியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில்,மாவட்டத்தின் எல்லையாக தொப்பூர் கணவாய் உள்ளது.இக்கணவாயின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 7 செல்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் வாகனங்கள் இந்த  கணவாயின் வழியாக தினசரி ஆயிரக்கணக்கில் கடக்கின்றன. இந்த கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதில் பலர் உயிரிழக்கிறார்கள்.எனவே இந்த மலை பாதையை அமானுஷ்ய சக்திகள் மிகுந்த மர்மம் நிறைந்த கணவாய் என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதி எது என்று கேட்டால், தொப்பூர் கணவாய் என்று டிரைவர்கள் நொடிப்பொழுதில் கூறிவிடுவார்கள். இங்கு கடந்த ஆண்டில் மட்டும் பதிவான விபத்து வழக்குகள் 41. இந்த ஆண்டு மட்டும்  இதுவரை விபத்துகளில் 15 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது மட்டுமல்ல பல ஆண்டுகளாகவே இங்கு ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளது. இரவு வேளைகளில் எவ்வளவு சிறப்பான டிரைவராக இருந்தாலும், தடுமாற்றத்துடன் வாகனம் ஓட்டும் இடம் என்றால் அது தொப்பூர் கணவாய் தான். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் அங்கு முனி, பேய்கள் நடமாட்டம் இருப்பதாக  கட்டுக்கதைகளை சொல்லும் அந்த பகுதி டிரைவர்கள், அந்த சாலையில் வாகனத்தை இரவு வேளைகளில் ஓட்டவே பயப்படுகிறார்கள். இங்கு அடிக்கடி விபத்து நடக்க பேய்கள் தான் காரணம் என்று உள்ளூர் டிரைவர்கள் கிலி கிளப்புகிறார்கள்.  ரோட்டின் இருபுறமும் உள்ள மலைகளில் இருந்து, இரவு நேரங்களில் பேய்கள் கடப்பதாகவும், அந்த நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதாகவும் சில டிரைவர்கள் கற்பனை கதைகளை சொல்கிறார்கள்.  

இந்த சாலை  மேடு பள்ளமாகவும்,வளைவுகள் மோசமாகவும், மலைப்பாங்காகவும் இருப்பதால், மற்ற சாலைகளைப் போல் இந்த சாலையில் அதிவேகத்தில் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம். அதனால் வாகனத்தை கட்டுப்படுத்த தவறும் லாரி டிரைவர்கள்,  முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிவிடுகிறார்கள். அல்லது கட்டுப்படுத்த தெரியாமல் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழக்கிறார்கள். எனவே, குறிஞ்சி நகர் சுங்கச்சாவடியில் உள்ள ஒலிப்பெருக்கியில், வாகனத்தை 2வது  கியரில் இயக்க வேண்டும் என்றும், அபாயகரமான மலை சாலை உள்ளது என்றும் எச்சரிக்கிறார்கள். இந்த சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு சாலை அமைந்துள்ள இடத்தின் தன்மையே காரணம் தவிர, வேறு எந்த அமானுஷ்ய  சக்தியும், பேயும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இப்பகுதியில் வரும் மூலிகை காற்றை சுவாசிப்பதால் விபத்து ஏற்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினர் விளக்கம் அளிக்கின்றனர்.

மூலிகை காற்றுதான் காரணம்...

அதிகாரிகள் கூறுகையில், ‘தொப்பூர் கணவாய் பகுதியில் அதிக மரங்களும்,மூலிகை பண்ணை மற்றும் நர்சரி பண்ணைகள் உள்ளது. இந்த மூலிகை பண்ணையில் இருந்து இதமான மூலிகை காற்று வீசுகிறது. இந்த காற்றால் நீண்ட தொலைவில்  இருந்து வரும் டிரைவர்கள், தன்னை மறந்து அயர்ந்து தூங்கிவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்போது இங்கு விபத்து நடக்கிறது. இங்கு முனி,பேய், பிசாசு எதுவும் இல்லை,’ என்கின்றனர்.

Related Stories: