உலக அழகிப்போட்டியில் பங்கேற்க சென்னை திருநங்கை பயணம்

சென்னை: உலக அழகிப்போட்டியில் பங்கேற்க சென்னையை சேர்ந்த திருநங்கை ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.  மிஸ் கிராண்ட் ஸ்டார் இன்டர்நேஷனல் திருநங்கைகளுக்கான அழகி போட்டி ஸ்பெயின் பார்சிலோனா நகரில் 8ம் தேதி (நாளை) முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 30 திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நமீதா கலந்து கொள்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.50 மணிக்கு  ஸ்பெயின் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  இந்தியாவில் இருந்து இதுவரை எந்த திருநங்கைகளும் பங்கேற்காத சர்வதேச போட்டியில், நான் கலந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இனி வருடம்தோறும் இந்தியா சார்பில் திருநங்கைகள் பங்கேற்பார்கள் என நம்பிக்கை உள்ளது.

திருநங்கைகள் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிறார்கள். அது மாற வேண்டும். அனைவரையும் உடன்பிறந்த சகோதரியாக பார்க்கவேண்டும். தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்த்தால் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறையும்.  முதல் 6 சுற்றுகள் முடிவில் ஸ்பெயினில் நடைபெறும் அழகி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். வருங்காலத்தில் திருநங்கைகளுக்கான பேஷன் பயிற்சி நிலையம் தொடங்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். பேஷன் துறையில் திருநங்கைகளுக்கான தனி ஒரு இடத்தை உருவாக்க பாடுபடுவேன். அதன்மூலம் திருநங்கைகளின் வாழ்வாதாரம் முன்னேற்றமடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: