பாகன் உள்பட 5 பேரை பலி வாங்கிய ஆண்டாள் யானை ஆனைமலை காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு

சேலம்: மதுரை அழகர் கோயில் ஆண்டாள் யானை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானை பெண்ணாக இருந்தாலும் இதற்கு தந்தம் உண்டு. ஏற்கனவே மதுரை அழகர் கோயிலில் 3 பக்தர்களை கொன்றுள்ளது. இதனால் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இதற்கென தனி இடம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பத்மினி என்ற ஊழியரை தந்தத்தால் குத்திக்கொன்றது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி யானையை பரிசோதித்த கால்நடை டாக்டரை ஆவேசத்துடன் கொல்ல முயன்றது. அவரை மீட்ட யானை பாகன் காளியப்பனை மிதித்துக் கொன்றது. பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பாகனின் சடலம் மீட்கப்பட்டது. மறுநாள் தான் ஆண்டாள் யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து குரும்பப்பட்டி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த யானையை தொடர்ந்து இங்கு வைத்து பராமரிக்க முடியாது. எனவே முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து  உயர் அதிகாரிகள், மதுரை ஆண்டாள் யானையை குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இருந்து பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர். அதன் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட வனஊழியர்கள் நேற்று குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வந்தனர். மாலை   மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தலைமையில் கால்நடை மருத்துவர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பக வனஊழியர்கள் நேற்று இரவு 7மணியளவில் ஆண்டாள் யானையை லாரியில் ஏற்றினர். பின்னர், அந்த யானை லாரி மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: