ஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி

திருப்பதி: ஆந்திராவில் ஜனசேனா கட்சித்தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருப்பதி  ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் அரசு மக்கள் நலப் பணிகளுக்காக எதுவும் செய்யாமல் செயலற்ற அரசாக உள்ளது. விஜயவாடாவில் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டில்  இருந்து 10 கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ள கிருஷ்ணா நதிக்கரையில் 40 பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். ஜெகன்மோகன் ஆட்சி   ஏற்பட்ட பின் மதமாற்றம், மதபிரசாரம் அதிகரித்துள்ளது.

நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகனுக்கு அதிக அளவிலான மக்கள் வாக்களித்து அவரை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி உள்ளனர். மாநிலத்தில்  நடைபெறும் தீவிர மதமாற்றத்தை அனுமதிப்பதற்காக அவருக்கு பொதுமக்கள் ஓட்டு போடவில்லை என்பதை முதல்வர் ஜெகன்மோகன் நினைவில்   கொள்ள வேண்டும். இப்பிரச்னை குறித்து பேசுவதால் எனது கட்சிக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுக்கள் குறைந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படப்  போவது கிடையாது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறுவது போல நான் பாஜக, தெலுங்கு தேச கட்சிகளோடு ரகசிய கூட்டணியில்  சேர்ந்திருந்தால் ஜெகன் முதல்வராகியிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: