கரூர் சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை ஒரு மாதத்திற்கு மூட தமிழ்நாடு வேளாண் இயக்குநரகம் நோட்டீஸ்

சென்னை: கரூரில் உள்ள சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை ஒரு மாதத்திற்கு மூடுமாறு தமிழ்நாடு வேளாண் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.  சில நாட்களுக்கு முன்னர் திருச்சி, மதுரை, கோவை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஐ.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கடந்த 15ம் தேதி கரூர் சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 30 கோடி ரூபாய் பணம் மற்றும் 10 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்நிறுவனம் 436 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் ஆல்பா சைபர் மெத்தலின் என்ற ஆபத்தான ரசாயண பொருளை கொண்டு இந்நிறுவனம் கொசுவலையை தயாரித்து அதனை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தை ஒரு மாதத்திற்கு மூட வேண்டும் என்று சென்னையில் உள்ள தமிழ்நாடு வேளாண் இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் வழங்கியுள்ளது. போலியான ஆவணங்களை வழங்கி உரிமம் பெற்றது. மேலும் உரிமம் இல்லாத இடத்தில் கொசுவலை தயாரித்தது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதால் கடந்த 2017ல் இந்நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனம் மீண்டும் மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Related Stories: