பாலியல் வன்கொடுமை வழக்குக்களை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் சென்னையில் இன்று தொடங்கியது!

சென்னை: சிறப்பு பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அமர்வு நீதிமன்ற கட்டடத்தில், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி வினீத் கோத்தாரி தொடங்கி வைத்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி சென்னையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6 நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் பல்வேறு நீதி மன்றங்களில் 1,66,882 பாலியல் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால் அந்த மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான அமைக்கப்படவுள்ள பிரத்யேக நீதிமன்றங்கள், மத்திய அரசின் நிதியின் கீழ் அமைக்க வேண்டும். இந்த நீதிமன்றங்களை, 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. அதன்படி, பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க ரூ.762.25 கோடி செலவில் நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில் 389 விரைவு நீதிமன்றங்கள், சிறார்கள் தொடர்பான பாலியல் வழக்குகளை (போக்சோ) மட்டும் விசாரிக்கும். இதர 634 நீதிமன்றங்கள் அனைத்து பாலியல் வழக்குகளையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் அமைக்கப்பட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தொடங்கப்பட்டது.

Related Stories: