நீர்நிலைகளில் உயிர் பலியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் நீர்நிலைகளில் எத்தனை பேர் மூழ்கி இறந்துள்ளனர், இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் கோட்டீஸ்வரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீர்நிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால், தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை நியமித்து நீரில் மூழ்குபவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவொற்றியூர் முதல் மகாபலிபுரம் வரை கடலோரத்தில் தடுப்புச்சுவர் கட்டவேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு அமல்படுத்த வில்லை என்றார்.   இதையடுத்து நீதிபதிகள், கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி எத்தனை பேர் இறந்துள்ளனர். இதுபோன்ற சாவுகள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.   திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள கடற்கரையில் எத்தனை பேர் மூழ்கி இறந்துள்ளனர் என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: