திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு: பக்தர்கள் வேதனை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் தியாகராஜசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள தெப்பக்குளம் தண்ணீரின்றி காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்  குளத்திற்கு மழைநீர் வரும் வகையில் சன்னதி தெரு மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய தெருக்களில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் சரிவர பராமரிக்காததால் அடைப்பு ஏற்பட்டு,  குளத்துக்கு மழைநீர் வராமல் தடைப்பட்டது. இதனால் தற்போது பெய்துவரும் மழையில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர்வரவில்லை. ஆனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கோயில் குளத்தில் ேதங்கியுள்ளதால் துர்நாற்றம்  வீசுகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள், பக்தர்கள் புகார் தெரிவித்ததால் சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் கால்வாயை தூர்வாரினர். இருப்பினும் சரியாக தூர்வாரி சீரமைக்காததால் தெப்பகுளத்துக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டுள்ளது. இந்தநிலையில் அறநிலைத்துறை அதிகாரிகள் வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். மழைநீர் கால்வாய் வழியாக குளத்திற்கு  கழிவுநீர் செல்வதை தடுக்கும் வகையில் சிமென்ட் கலவை போட்டு கால்வாயை  அடைத்தனர்.இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘’கோயில் குளத்திற்கு கழிவுநீர் வருவதை தடுக்க தற்காலிகமாக கால்வாய் பாதை அடைக்கப்பட்டுள்ளது.

 மழைநீர் கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக  தூர்வாரி சீரமைத்து வீடுகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீரை தடுத்து நிறுத்திய பிறகே கால்வாய் அடைப்பு நீக்கப்படும்” என்றனர். பக்தர்கள் கூறுகையில், “கோயிலை சுற்றிலும் பழுதடைந்த வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. கோயில் குப்பையை அறநிலைத்துறை ஊழியர்கள் தரம் பிரித்து கோயில் பின்புறம் மேற்கு மாட வீதியில் கொட்டிவைக்கின்றனர். ஆனால் அதை  மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் வைத்துவிடுவதால் துர்நாற்றம் வீசுகிறது” என்றனர்.

Related Stories: