சிவகங்கையில் நவீன மின் மயானம் அமைக்க வேண்டும்

சிவகங்கை :  சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பிரதான மயானத்தில் நவீன மின் மயான வசதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சி 1வது வார்டு, திருப்புத்தூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே மயானம் உள்ளது. இந்த மயானம் சிவகங்கை நகரில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பிரதான மயானம் ஆகும். இங்கு சடலங்களை எரியூட்ட கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் இருந்தது. கட்டிடம் முற்றிலும் சிதைந்து, மேற்கூரை இடிந்த நிலையில், நான்கு புறம் உள்ள சுவர்களும் எவ்வித பிடிமானமும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் இருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இக்கட்டிடம் இடிக்கப்பட்டது.

ஆனால் புதிதாக கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் இதே மயானத்தில் சிறிய அளவிலான தகர கொட்டகையில் வைத்து சடலங்கள் எரியூட்டப்படுகிறது. ஆனால் இதில் எரியூட்டுவதற்கான சிமெண்ட் தளம் உள்ளிட்ட வசதி இல்லை. சிறிய அளவிலான கொட்டகை என்பதால் மழை நேரத்தில் சடலங்களை எரியூட்டுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இறுதி சடங்குகளை அமர்ந்து செய்வதற்கும் இடம் இல்லை. பெயரளவிற்கு கொட்டகைக்குள் எரியூட்டுவதற்கு பதில் அருகிலுள்ள காலியிடங்களிலேயே எரியூட்டலாம் எனில் மழைக்காலத்தில் அவ்வாறும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 திருப்புத்தூர் சாலையில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாய் உள்ளது. மயானத்தின் முன்புறம் சிவகங்கை நகரில் அள்ளப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டப்படுகிறது. மழை நேரத்தில் இந்த கழிவுகள் அனைத்தும் மழை நீரோடு அருகில் உள்ள சி.பி காலனி பகுதிக்குள் செல்கிறது. நகரின் பிரதான மயானத்தின் நிலை இவ்வாறு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய மின் மயானம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘கிராமங்களில் உள்ள மயானங்களில் கூட எரியூட்ட, சடங்குகள் செய்ய என தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் மயானங்கள் உள்ளன. ஆனால் மாவட்ட தலைநகரில், மின் மயானம் இல்லை. மானாமதுரை சாலையில் உள்ள நவீன எரியூட்டும் மயானத்தில் மின்சாரம் மூலம் இல்லாமல் விறகு மூலம் வெப்பம் ஏற்படுத்தி எரியூட்டப்படுகிறது. கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பிரதான மயானத்தில் எரியூட்டக்கூட கட்டிடம் இல்லை. எனவே இங்கு மின் மயானம், சடங்குகள் செய்ய புதிய கட்டிடம் கட்டவும், நீர் வசதி, சாலை வசதி செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: