கால்வாய் வசதி இல்லாததால் வடியாத வெள்ளம் தரைப்பாலத்தில் தேங்கிய நீரில் தவறி விழுந்த தொழிலாளி பலி: கொட்டும் மழையில் மக்கள் மறியல் மாநகர பேருந்து மீது கல்வீச்சு

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தரைப்பாலத்தில்  தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, மாநகர பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன. அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடியில் உள்ள ராணுவத்துறை தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் பல ஆண்டாக மழைநீர் கால்வாய் அமைக்கப்படாததால், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம்போல் தேங்குகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு பாடி முதல் திருநின்றவூர் வரை ஆங்காங்கே இச்சாலையின் குறுக்கே 20க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால், அந்த பாலத்திற்கு தண்ணீர் செல்ல வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை.

இதனால் தற்போது பெய்து வரும் மழைநீர் செல்ல முடியாமல் தரைப்பாலம் அருகில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை, நேரு நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ஷேக்அலி (49) என்ற கூலித்தொழிலாளி நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து மண்ணூர்பேட்டை சி.டி.எச் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் கட்டப்பட்டு இருந்த தரைப்பாலம் தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனை கவனிக்காத ஷேக்அலி பள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது அவரை அந்த வழியாக வந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதனையடுத்து பொதுமக்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அவர்கள் வந்து ஷேக் அலியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொடர்ந்து மழை பெய்ததால் அவரை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் மீட்புப்பணிகள் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து தீயணைப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது திருவான்மியூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மாநகர பேருந்து (தடம் எண் 47டி) மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பஸ்சின் பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடி  நொறுங்கி கீழே விழுந்தது. தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து ஓரமாக சென்றனர். மேலும், போலீசார்  மீட்பு பணிக்கு உதவியாக போக்குவரத்தையும் தடை செய்தனர்.

பின்னர், சி.டி.எச் சாலையில் வரும்  வாகனங்கள் அனைத்தும் அம்பத்தூர் தொழிற்பேட்டை உட்பகுதி வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் பிறகு, தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் ஷேக் அலியை சடலமாக மீட்டனர். போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையில் அலட்சிய போக்கால் தொழிலாளி கால்வாயில் விழுந்து பலியான சம்பவம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: