2+2 பேச்சுவார்த்தைக்காக வந்துள்ள ஜப்பான் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டோசிமிட்சு மொதேகியும்,  பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரா கோனோவும் டெல்லி வந்துள்ளனர். இவர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது, ‘2+2 பேச்சுவார்த்தை’ என அழைக்கப்படுகிறது. அமெரிக்கா உடன்  நடத்தப்பட்ட இதேபோன்ற பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைத்ததால், ஜப்பானுடன் இந்த பேச்சுவார்த்தையை இந்தியா நடத்துகிறது. இதன்மூலம், இரு நாட்டு உறவுகளும், ராணுவ ஒத்துழைப்பும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

டெல்லி வந்துள்ள ஜப்பான் அமைச்சர்கள், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இருநாட்டு மக்களின் நலனுக்காக, இரு நாடுகள் உறவில் அனைத்துவிதமான வளர்ச்சிகளும் ஏற்பட வேண்டியது அவசியம். இந்தியா-ஜப்பான் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு அடுத்த மாதம் வரும் ஜப்பான் பிரதமர் ஜின்சே அபேவின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, வளம், நிலைத்தன்மையை ஏற்படுத்தும் தொலை நோக்குக்கு, இந்தியா-ஜப்பான் உறவு மிக முக்கியமானது. இந்தியா-ஜப்பான் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை அடிக்கடி நடைபெறுவதுதான், நமது உறவு வலுவடைந்ததற்கு சாட்சியமாக உள்ளது. இந்த 2+2 பேச்சுவார்த்தை இரு நாடுகள் உறவையும், ராணுவ ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டும்,’’ என்றார்.

Related Stories: