2013ல் தொடங்கி இன்று வரை இழுத்தடிப்பு 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்

கொரட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 7ஆண்டாக ஆமை வேகத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடக்கிறது. இதனால், ரயில் பயணிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அம்பத்தூர் அருகே கொரட்டூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தில் நான்கு வழிப்பாதைகள் அமைந்துள்ளன. இதில் இரு இருப்பு பாதைகளில் மின்சார ரயில்களும், மற்ற இரு இருப்பு பாதைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்று வருகின்றன. இதன் வழியாக தினமும் 160க்கு மேற்பட்ட மின்சார ரயில் சேவைகளும், 50க்கு மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்தை கொரட்டூர் பகுதிகளான சீனிவாசபுரம், பாலாஜி நகர், சிவலிங்கபுரம், எல்லையம்மன் நகர், சுப்புலெட்சுமி நகர், அக்ரகாரம், கோபாலகிருஷ்ணன் நகர், ராஜிவ்காந்தி நகர், லேக்வியு கார்டன், கே.எஸ்.ஆர் நகர், திருமலை நகர், காவியா நகர், சாரதா நகர், கண்டிகை, டி.வி.எஸ். நகர், அன்னை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, குப்புரெட்டி நகர், சிவானந்த நகர், சாந்தி காலனி, வெங்கடராமன் நகர், வன்னியர் தெரு, சாவடி தெரு உள்ளிட்ட நகர்களைச் சார்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயில் நிலையம் அருகிலேயே தண்டவாளத்தை கேட் வழியாக பல ஆண்டாக பயணிகள் கடந்து சென்று வந்தனர். இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடியே கிடந்ததால் பயணிகள் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை. மேலும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தன. இதனால்  உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்கள், பயணிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிப்பட்டு உயிர் பலியாகி வந்தனர். இதனை அடுத்து, பயணிகளும், பொதுமக்களும் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே நிர்வாகம் கொரட்டூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’கொரட்டூர்  சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் 10.5கோடி நிதி ஓதுக்கியது. இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 9ந்தேதி கொரட்டூர் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை பணிக்காக வேலை தொடங்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை 36மீட்டர் நீளம், 12மீட்டர் அகலம், 4.5மீட்டர் உயரம் கொண்ட வகையில் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி காலம் இரு ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகள் நவீன தொழில் நுட்ப முறையில் நடைபெற்று வந்தன. ஆனாலும், சுரங்கப்பாதை பணிகள் திட்டமிட்டபடி இரு ஆண்டுக்குள் முடிக்கப்படவில்லை. மேலும், இந்த பணிகள் 7ஆண்டுகளை கடக்கும் நிலை வந்து விட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் சுரங்கப்பாதை இணைப்பு சாலை பணி அமைக்க 13.86கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. தற்போது, ரயில்வே எல்லை வரையிலான பணிகள் 90சதவீதம் முடிந்து விட்டது. ஆனால், தற்போது மாநகராட்சி பகுதிகளை இணைக்கும் சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் பயணிகள் தினமும் ரயில் நிலையத்திற்கு சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், கொரட்டூர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள 20க்கு மேற்பட்ட நகர்களைச் சார்ந்த பொதுமக்களும் சென்னை, புறநகர் பகுதிக்கு சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் 5 கி.மீ தூரம் சுற்றி தான் தங்களது பணிக்காக சென்று வர வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது பயண இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சுரங்கப்பாதை நடைபெறுவதால் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் தடை செய்யபட்டு உள்ளது. இதனால் அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியாது. மேலும், பாதசாரிகள் ஒத்தையடி பாதை வழியாக அவதிப்பட்டு செல்கின்றனர். இப்பணிகளால் கடந்த 7ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியே வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கவனித்து கொரட்டூர் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் சுரங்கப்பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில்  விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், சுரங்கப்பாதை பணியை ரயில்வே பகுதியில் 2ஆண்டில் முடிக்க காலம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அப்பணியை ரயில்வே நிர்வாகம் 5ஆண்டுகள் ஆகியும் இன்று வரை முழுமையாக முடிக்கவில்லை. இதனால், எங்களது பணியையும் உடனடியாக தொடங்க முடியவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் சாலை பணிகளை தொடங்கி முடிக்கும் தருவாயில் உள்ளோம். சாலை பணிகளுக்கு நீதிமன்ற வழக்குகள், மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம் ஆகியவற்றின் பணிகளால் கால தாமதம் ஏற்பட்டது. இன்னும் இரு மாதத்தில் சாலை பணிகள் முடிந்து விடும். மேலும், சர்வீஸ் சாலை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லையை வரையறை செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: