மேற்கு வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி..: ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது என மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த 3 சட்டமன்ற தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது என மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் காலியாக இருந்த காரக்பூர் சதார், கரீம்பூர், கலியாகஞ்ச் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 25ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் முதல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டது முதலே 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இந்த நிலையில், 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது. பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளார்கள். பாஜகவின் அராஜக அரசியலுக்கான விலையை பாஜக கொடுத்திருக்கிறது. இந்த மண்ணின் மக்களை அவமரியாதை செய்ததன் பலனை பாஜக அனுபவிக்கிறது. பாஜகவினருக்கு இது ஒருநல்ல பாடம். இந்த வெற்றியானது மேற்கு வங்க மக்களின் வெற்றியாகும். பாஜகவின் அணுகுமுறை நீடித்தால் இதே பாடத்தை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜக, இந்த இடைத்தேர்தலில் சறுக்கியுள்ளது அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெற்ற கராக்பூர் மற்றும் கலியாகஞ்ச் தொகுதிகளில் திரிணாமூல், கடந்த 30 ஆண்டுகளில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: