நெல்லை: சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி காட்டுநாயக்கர் சமூகத்தினர் நெல்லை சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கீரிபிள்ளை, பாம்பு, ஆமை, அணில்களுடன் வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலப்பாளையம் அருகே தருவை கிராமத்தில் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு பழங்குடியின நாடோடி கூட்டமைப்பு செயலாளர் மகேஸ்வரி தலைமையில் தருவையை சேர்ந்த காட்டுநாயக்கர் சமூக மக்கள், நேற்று மாலை நெல்லை சப்-கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். கீரிபிள்ளை, அணில், பாம்பு, ஆமை உள்ளிட்டவற்றையும் கூண்டில் அடைத்து கொண்டு வந்து அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், ெநல்லை மாவட்டத்தில் குடியிருந்து வருகிறோம். எங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை தருவை கிராமத்தில் வசிப்பதற்கான ஆதாரமாக உள்ளது. ஆனால் விருதுநகர் மாவட்டம் எங்களது பூர்வீகம் எனக் கூறி மாவட்ட நிர்வாகம், எங்களை அங்கு சென்று சாதி சான்றிதழ் வாங்க வேண்டும் எனக்கூறி அலைக்கழித்து வருகிறது. இதனால் பல்வேறு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். தற்போது முற்றுகையில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.
தகவலறிந்து பாளை. இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துரமாலிங்கம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலவலர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 10 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்திற்கு காட்டுநாயக்கர் சமூகத்தினர் கொண்டு வந்திருந்த அணில், கீரிபிள்ளை, பாம்பு உள்ளிட்ட பிராணிகளை வனத்துறையினர் கூண்டுடன் பறிமுதல் செய்தனர்.