கார்டோசாட்-3 மற்றும் 13 அமெரிக்க செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது.  பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம் பூமி ஆராய்ச்சிக்காக கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களை கடந்த 25ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த இருந்தது. ஆனால், வானிலை மாற்றத்தால் அன்று விண்ணில் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, 27ம் தேதி காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது.  எனவே திட்டமிட்டப்படி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்டை இஸ்ரோ இன்று காலை 9.28 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த உள்ளது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் 509 கி.மீட்டர் தொலைவில் அதன் சுற்று வட்டப்பாதையில் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும்.  கார்டோசாட்-3 செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன கேமரா துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.  மேலும், இந்த செயற்கைக்கோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 ‘நானோ’ வகை செயற்கைக்கோள்களும் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

Related Stories: