பராமரிப்பு இல்லாததால் பாழடைந்தது சமூக விரோதிகளின் பிடியில் ‘கோட்டை’ காவல்நிலைய கட்டிடம்: தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்லை: பாளையில் உள்ள மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில் மேல்  பகுதியில் இயங்கிவந்த காவல் நிலையம் தற்போது செயல்படாததால் அந்தப்பகுதி சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவருகிறது. எனவே மேல்பகுதியை சீரமைத்து விஷமிகள் புகாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பாளையங்கோட்டையின் வரலாற்றை பறைசாற்றும் பல்வேறு இடங்களில் மையப்பகுதியில் உள்ள மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில் மற்றும் மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாக கோட்டை கட்டிடமும் ஒன்றாகும். இந்த கட்டிடம் முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்டது. முன் பகுதியில் கோயில்கள் அருகே வணிக  கடைகள் பல உள்ளன. பின்புறம் கோட்டை மேல் பகுதிக்கு செல்ல இருவழிகள் கொண்ட உயரமான கல்படிக்கட்டுகள் உள்ளன.

இந்த மாடிப்பகுதியில் திறந்த வெளி இடமும் ஓட்டுக்கட்டிடமும் உள்ளன. இங்கு முன்னர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகமும், பின்னர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வளாகமும் இயங்கிவந்தது. இங்கிருந்து போலீஸ் அலுவலகம் இடம் மாறி சென்ற பின்னர் மேல் பகுதி பராமரிக்காமல் விடப்பட்டுவிட்டது. இங்கு செல்வதற்கு பின்புற படிக்கட்டுகள் வசதியாக உள்ளன. இதனால் இந்த வழியாக சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மேலே சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியை ஒட்டி தேவையற்ற மரம் செடிகொடிகள் வளர்ந்து கோட்டையின் பலத்தை குறைத்து வருகின்றன. திறந்து கிடக்கும் மேல்பகுதி பழைய காவல் நிலைய அறைக்குள் கால்நடைகள், நாய்களும் முகாமிட்டுள்ளன. விஷமிகள் இப்பகுதியை பயன்படுத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன.

படிஏறும்பகுதியில் பெரிய மரம்ஒன்று வளர்ந்து தற்போது கருகி விழும் நிலையில் ஆக்கிரமித்து நிற்கிறது. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கம்பீர கோட்டை மேல்பகுதி மற்றும் பின்புற பகுதி பராமரிக்கப்படாததால் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று ெசால்வது போன்று காட்சி அளிக்கிறது. எனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டை கோயில்கள் வளாகத்தின் மேல்பகுதியை சீரமைத்து சமூக விரோதிகள் உள்புகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

மேலும் கோட்டை சுவருக்கு பலவீனம் ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள மற்றும் காய்ந்த தேவையற்ற மரங்களை அகற்றி பராமரிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: