மதுரை அருகே பஸ் - கார் மோதல்; 3 போட்டோகிராபர் பலி: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே அரசு பஸ் - கார் நேருக்கு நேர் மோதியதில் 3 போட்டோகிராபர்கள் பலியாகினர்.மதுரை, பொன்மேனியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன் (23). திருமங்கலத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார்(28). மூன்று பேரும் மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளனர். நேற்று முன்தினம் தினேஷ்குமாருக்கு பிறந்தநாள். இதையொட்டி ஸ்டூடியோவில் தினேஷ்குமார் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

பின்னர் காரில் 3 பேரும் திருமங்கலத்தில் பிரசன்னகுமாரை இறக்கி விடுவதற்காக சென்றனர். காரை தினேஷ்குமார் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 3 மணியளவில் திருப்பரங்குன்றம் அருகே புளியங்குளம் பகுதியில் வந்தபோது, எதிரே நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ், கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கி பஸ்சுக்கு அடியில் சிக்கிக்கொண்டது. இதில் மூவரும் பலியாகினர். தகவலறிந்து ஆஸ்டின்பட்டி போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் உடல்களை மீட்டனர்.  பிறந்தநாள் கொண்டாடிய சிறிது நேரத்தில், விபத்தில் 3 போட்டோகிராபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்டிஓ உதவியாளர் லாரி மோதி பலி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக (ஆர்டிஓ) இருப்பவர் அமர்நாத். இவர், நேற்று முன்தினம் இரவு பந்தல்குடி, இருக்கன்குடி விலக்கில் ஆர்டிஓ அமர்நாத், தனது உதவியாளர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்த லாரியை ஆர்டிஓ நிறுத்த சொன்னார். இதனையடுத்து உதவியாளர்கள் மாரிமுத்து, பால்பாண்டி இருவரும் லாரியை கையை காட்டி நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், வேகமாக வந்த லாரி மாரிமுத்து மீது மோதிவிட்டு, முன்னால் நின்ற சுண்ணாம்பு லாரி மீதும் மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து(30) சம்பவ இடத்திலேயே பலியானார். பால்பாண்டி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து, தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் குமாரை (21) கைது செய்தனர்.

Related Stories: