சென்னையில் விடிய, விடிய மழை கடலோர மாவட்டத்தில் மழை நீடிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நல்ல மழை பெய்து வந்தது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. சென்னையில் முக்கிய பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை,  ஈக்காட்டுதாங்கல், வடபழனி, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எம்ஆர்.சி.  நகர், அடையாறு, மத்திய கைலாஷ், பெருங்குடி, வேளச்சேரி, பெரம்பூர், எழும்பூர், சென்ட்ரல், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. இதே போல தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:வங்கக்கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் மழை பெய்தது. நாளை (இன்று) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து வங்கக்கடலின் கிழக்கு திசையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவ வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 25ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டத்திலும், 26ம் தேதி கடலோர மாவட்டங்களிலும், 27ம் தேதி மீண்டும் தென் தமிழக கடலோர மாவட்டத்திலும், 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்தில் ஏதாவது காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: