பிரகாசமான எதிர்காலத்திற்காக பாஜக - தேசியவாத காங்கிரஸ் இணைந்து செயல்படும்; பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: மராட்டிய மாநில முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவாருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரகாசமான எதிர்காலத்திற்காக பாஜக - தேசியவாத காங்கிரஸ் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் பதவியேற்றுள்ளார். நேற்று வரை உத்தவ் தாக்கரே முதல்வராக விருப்பம் தெரிவித்திருந்த சரத்பவார், திடீரென் இன்று காலை பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது.

குடியரசு தலைவர் ஆட்சி முடிவு

பாஜக- தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சியால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய அரசு அமைந்ததால் 10 நாளாக அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories: