கோயம்பேடு பஸ் நிலையத்தில் 300 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்: கூடுதல் கமிஷனர் தகவல்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சமீபகாலமாக வழிப்பறி, செயின், செல்போன் பறிப்பு, கஞ்சா விற்பனை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  குற்றவாளிகளின் முகங்களை துல்லியமாக கண்டறிய 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது  நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களில் 300 கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவுபெறும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கோயம்பேடு  போலீசார்  இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனரா என்றும் ஆய்வு செய்தார். குற்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் போலீசார் மாறுவேடங்களில் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Related Stories:

>