சென்னை மண்டலத்தில் 20 பேர் மட்டுமே பணிபுரியும் அவலம் மக்கள் உயிரோடு விளையாடும் உணவு பாதுகாப்பு துறை: நோய் பாதிப்புக்கு ஆளாகும் அவலம்

பெரம்பூர்: இன்றைய நவீன உலகில் அனைத்தும் வணிகமயமாக மாறி உள்ளதால், சிறு நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைத்தும், மக்களுக்கு தேவையான பொருட்களை போட்டி போட்டு சலுகை விலையில் விற்பனை செய்து வருகின்றன.வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி உணவுப் பொருள், உடை, பழம், காய்கறி உள்ளிட்ட அனைத்தும் கடைகளுக்கு சென்று வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தினால் வீடு தேடி பொருட்கள் வரும் என்ற நிலை உள்ளது.  ஆனால், அவ்வாறு வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் தரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, உணவு பொருட்களின் தரம் என்பது மிக மோசமாக உள்ளது. காய்கறி, பழங்கள், பால், மளிகை பொருட்கள் என அனைத்திலும் ரசாயனம் அதிகரித்து வருகிறது. காய்கறி மற்றும் பழங்கள் பளபளப்பாக தெரியவும், பெரிய அளவில் வளரவும் நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சந்தைக்கு வரும் பழங்கள் விரைந்து பழுக்கவும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றி ஓரளவு மக்கள் அறிந்திருந்தாலும் வேறு வழியின்றி அதை வாங்கி பயன்படுத்த பழகிவிட்டனர்.

தினசரி நாம் பயன்படுத்தும் தண்ணீர், இட்லி மாவு, அரிசி, கீரை வகைகள் என அனைத்திலும் ஏதோ ஒரு கலப்படம் உள்ளது. இதை பயன்படுத்தும் மக்களுக்கு வயிற்று உபாதை, புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இவற்றை கண்காணித்து தடை செய்வதற்கு அரசு சார்பில் அமைக்கப்பட்ட  துறைதான் உணவு பாதுகாப்புத்துறை.இந்த துறையின்கீழ் 37 விதமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக மக்கள் பயன்படுத்தும் உணவின் கலப்படமில்லாமல் அதை அவர்களுக்கு வழங்க வேண்டியது முக்கிய கடமையாகும்.  ஒரு மனிதன் வாழ இன்றியமையாதது உணவு. அந்த உணவில் செய்யப்படும் கலப்படங்கள் கண்டறிய ஒரு துறை அமைக்கப்பட்டு அந்த துறையின் கீழ் அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், பொருட்களில் கலப்படத்தை தடுப்பது மட்டுமின்றி, உணவகங்களை ஆய்வு செய்து கலப்படம், தரமற்ற உணவு விற்பனையை தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் அதன்படி எந்த பணிகளும் நடைபெறுவதில்லை.  

 சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஓட்டல்கள், சாலையோர கடைகள், துரித உணவகங்கள், சிற்றுண்டிகள் என பல்வேறு கடைகள் உள்ளன. இவற்றில்  உணவு பண்டங்களில் உள்ள கலப்படத்தை  கண்டறிய குறைந்தபட்சம் 5 ஆயிரம் ஊழியர்கள் தேவை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் சென்னை மண்டலத்திற்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை வெறும் 20 பேர் மட்டுமே. சென்னையில் உள்ள அனைத்து உணவுப் பொருள் கலப்படங்களையும் இந்த 20 பேர்தான் கண்டுபிடிக்கும் நிலை உள்ளது. ஆனால் இவர்கள் பொதுமக்களிடமிருந்து அல்லது சமூக ஆர்வலர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் மட்டுமே சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி கலப்பட பொருட்களை பிடிக்கின்றனர். இவ்வாறு எங்கோ ஒரு சம்பவம் எப்போதாவது நடைபெறுகிறது. இதுஒருபுறம் இருக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மளிகை கடை உள்ளிட்டவற்றில் இருந்து மாதம்தோறும் சரியாக பணம் சென்று விடுவதால், அவர்களும் கண்டும் காணாமல் உள்ளனர்.

 பல இடங்களில் லாரிகளில் தண்ணீர் பிடித்து அதை கேன்களில் அடைத்து விற்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. கேட்டால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என கூறுவார். இதேபோன்று சிறு கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை 99 சதவீதம் கலப்பட பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி, சென்னை மண்டலத்தில் போதிய உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கவும், கலப்பட மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

உயர்மட்டம் வரை லஞ்சம்

தள்ளுவண்டி உணவகங்கள், நடைபாதை ஓட்டல்கள் முதல், நட்சத்திர ஓட்டல்கள் வரை இந்த தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் உணவு பொருட்களை பரிசோதித்தால் அதில் உள்ள கலப்படங்களின்  உண்மைத்தன்மை தெரியவரும். பழைய சிக்கன், கெட்டுப்போன காய்கறிகள் போன்றவற்றை வாங்கி அதை சமைத்து விற்கின்றனர்.  இதுவரை எந்த பாரிலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக  செய்திகள் வெளிவரவில்லை. மேலும், கலப்பட விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்க, ஒவ்வொரு கடைக்கும் ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்து புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனர். இந்த மாமூல் தொகை கீழ்மட்டத்தில் தொடங்கி அமைச்சர் வரை செல்வதாகவும் கூறப்படுகிறது.

கடுமையான சட்டம் இல்லை

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,  சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே உணவு பாதுகாப்பு துறைக்கு குறைந்த அளவிலான  ஆட்களே உள்ளனர். இதனால் எங்களுக்கு வேலை பளு அதிகரிக்கிறது. எப்போது மக்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று புகார்களை பதிவு செய்து அவர்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்றோம்.

மேலும் ஒரு கலப்படத்தை கண்டுபிடித்தால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு முடியும் போது மட்டுமே அவர்களுக்குரிய  தண்டனை கிடைக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் கலப்படத்தை தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். எனவே, கடுமையான சட்டம் வேண்டும். அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் வழங்குவதுடன், தேவையான ஆட்களை இந்த துறைக்கு  உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: