சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது?: பொன் மாணிக்கவேல் அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சிலைக் கடத்தல்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு ெசய்வதற்காக உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு அதிகாரி தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை அமல்படுத்தாததால் தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, பொன்மாணிக்கவேல் தனது விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் கூடுதல் டிஜிபியிடம் தாக்கல் செய்யவில்லை. அவர் சிலை கடத்தல்  தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் டி.ஜி.பி  நடத்தும் ஆய்வு கூட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. கலந்து கொள்ளக்கூடாது என்று சிறப்பு பிரிவில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் பொன் மாணிக்கவேலுக்கு உரிய ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால், தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் எந்த  முகாந்திரமும் இல்லை   பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு கடந்த இரண்டாண்டுகளில் ரூ.31 கோடியே 96 லட்சம் ஒதுக்கியுள்ளது. ஆனால், ஒரு வழக்கில் கூட அவர் இதுவரை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அப்போது, நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை விசாரிக்க கூடாது என்று உத்தரவில் கூறவில்லை. ஆறு ஆண்டுகள் இதே பிரிவில் நல்ல அனுபவம் பெற்றவர் என்பதால்தான் அவரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து  உத்தரவிடப்பட்டது. இந்த நீதிமன்றம் ஒரு சிறப்பு பிரிவை உருவாக்க உத்தரவிட்ட நிலையில் எந்த காரணத்திற்காக அரசும் ஒரு சிலை கடத்தல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, பொன்  மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வக்கீல் செல்வராஜ் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது  என்பது குறித்து அவர் மனு தாக்கல் செய்ய வேண்டும்.அதேபோல், அரசு என்ன வசதிகளை செய்து தந்துள்ளது என்பதை அரசுத் தரப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Related Stories: