மக்களவையில் பரூக் அப்துல்லா கைது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் : தயாநிதி மாறன் எம்பி கொண்டு வந்தார்

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா கைது குறித்து மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகிய 3 முன்னாள் முதல்வர்கள் உட்பட பல  அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், நகர் மக்களவை தொகுதி எம்பியான பரூக் அப்துல்லாவை குளிர்க்கால கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல், மத்திய அரசு தொடர்ந்து காவலில் அடைத்து  வைத்திருப்பதற்கு பல்வேறு கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பரூக் அப்துல்லா கைது குறித்து, மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பரூக் அப்துல்லா, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமான வழக்கு கடந்த செப்டம்பர்  மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அமர்வில் வந்தபோது, பரூக் அப்துல்லா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது  செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தரப்பிலும் காஷ்மீர் அரசு நிர்வாக தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த ஒரு எம்பியையும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் முறையாக அவைக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் சபாநாயகர் அவர்களுக்கும் அவைக்கும் உரிய முறையில் தகவலை  தெரியப்படுத்த வேண்டிய மத்திய அரசு சம்பந்தப்பட்ட உறுப்பினர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இது வரை நாடாளுமன்றத்திற்கு தகவல் அளிக்காதது ஏன்? இது நாடாளுமன்ற விதிகளை மீறும் செயல் மட்டுமல்ல,  சபாநாயகரை அவமதிக்கும் செயலுமாகும். இது போன்ற செயல்கள் அவையின் மாண்பை குலைக்கும்.இவ்வாறு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related Stories: