சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றாம் நிலை நகராட்சிகள் தொடர்பான சட்டப்பிரிவை நீக்கி, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இனி 3ம் நிலை நகராட்சிகள் என்று எதுவுமே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம் ₹10 கோடிக்கு மேல் உள்ள நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகள் என்றும், ஆண்டு வருமானம் ₹6 கோடி முதல் ₹10 கோடி வரை உள்ள நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சிகள் என்றும், ₹4 கோடி முதல் ₹6 கோடி வரை வருமானம் உள்ள நகராட்சிகள் முதல் நிலை நகராட்சிகள் என்றும், ₹4 கோடிக்கு கீழ் உள்ள நகராட்சிகள் இரண்டாம் நிலை நகராட்சிகள் என்றும், இதை தவிர்த்து மக்கள் தொகை 30 ஆயிரத்திற்கு மேல் உள்ள நகராட்சிகள் மூன்றாம் நிலை நகராட்சிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று, ஆண்டு வருமானம் ₹2 ேகாடிக்கு மேல் உள்ள பேரூராட்சிகள் சிறப்பு நிலை என்றும், ₹1 கோடி முதல் ₹2 கோடி வரை வருமானம் உள்ள பேரூராட்சிகள் தேர்வு நிலை என்றும், ₹50 லட்சம் முதல் ₹1 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ள பேரூராட்சிகள் முதல் நிலை என்றும், ₹50 லட்சத்திற்கு கீழ் உள்ள பேரூராட்சிகள் 2ம் நிலை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக மாநகராட்சிகளை உருவாக்கும் போது அதன் அருகில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்படும் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் கலைக்கப்படுகின்றன. இதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மூன்றாம் நிலை நகராட்சிகள் மாநகராட்சி பகுதிகளுடன் இணைக்கப்பட்டு விட்டதால் அது தொடர்பான சட்டப் பிரிவை நீக்கி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மொத்தம் 49 மூன்றாம் நிலை நகராட்சிகள் இருந்தன. இவற்றில் 12 நகராட்சிகள் திருப்பூர், வேலூர், ஈரோடு, சென்னை மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன. மீதம் இருந்த 36 நகராட்சிகள் பல்வேறு கால கட்டங்களில் தரம் உயர்த்தப்பட்டுவிட்டன. கடைசியாக, வேலூர் மாவட்டத்தில் இருந்த மேல்விசாரம் மூன்றாம் நிலை நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுவிட்டது.இதன்படி தமிழகத்தில் தற்போது ஒரு மூன்றாம் நிலை நகராட்சிகள் கூட இல்லை. எனவே தமிழ்நாடு மாநில மாவட்ட பஞ்சாயத்து சட்டத்தில் உள்ள மூன்றாம் நிலை தொடர்பான சட்டப்பிரிவு தேவைக்கு அதிமாக உள்ளது. எனவே மீண்டும் தேவைப்பட்டால் சட்டத்தை திருத்தி இந்த பிரிவை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
