மருத்துவ துறைக்கு தேவைப்படும் உபகரணங்களை தயாரிக்க விரைவில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மருத்துவ துறைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மருத்துவ பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு உதவும் வகையில் அருங்காட்சியாகத்தை மருத்துவ சுற்றுலா தலமாக மாற்ற விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையின் 200வது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி நினைவு வளைவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எலியட்ஸ் அருங்காட்சியகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மேலும் 200ம் ஆண்டின் சிறப்பம்சமாக 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கு அதிநவீன கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருவதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது எனவும், போதுமான அளவில் மருந்துகள் கையிருப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசின் அழுத்தத்தின் காரணமாக தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. அதற்கான  பணிகள் எந்த தொய்வும் இன்றி நடைபெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், எழும்பூர் கண் மருத்துவமனையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் நல்ல முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு உதவும் வகையில் இந்த அருங்காட்சியாகத்தை மருத்துவ சுற்றுலா தலமாக மாற்ற விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும். மருத்துவத்துறைக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்க மருத்துவ பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: