மோடியின் பயணங்களால் இந்தியா மீதான மதிப்பு வெளிநாட்டில் அதிகரிப்பு: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களினால் அங்கு இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, பாஜ நாடாளுமன்ற குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ``பிரதமர் மோடி ரஷ்யா, சவுதி அரேபியா, பக்ரைன், பூடான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டார். இது தவிர, கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஐநா பொதுசபை கூட்டம், பிரிக்ஸ் மற்றும் ஆசியான் மாநாடுகளிலும் அவர் பங்கேற்றார்.

பிரதமரின் இத்தகைய வெளிநாட்டு பயணங்களினால் வெளிநாடுகளில் இந்தியாவின் நிலை, மதிப்பு உயர்ந்துள்ளது. தீவிரவாதத்தை முன்னிறுத்தி அவர் பேசியதால் உலக நாடுகள் பலவற்றின் ஆதரவை இந்தியாவால் பெற முடிந்தது. அதனால்தான் சவுதி அரேபியா, பக்ரைன்  போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் மிக உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அளித்தன,’’ என்றார்.  பின்னர் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ``பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் சேருவதன் மூலம் பல நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் மேம்பட்டிருக்கும், அதே சமயம் உள்நாட்டு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். முந்தைய அரசு இதற்கு ஆதரவு அளித்தது. ஆனால், நாட்டின் நலன் கருதி மோடி அரசு, இந்த கூட்டமைப்பில் சேரும் முடிவை ஒத்திவைத்தது,’’ என கூறினார்.

பொருளாதாரம், பாரம்பரிய மருத்துவம், தண்ணீர் தட்டுப்பாடு, டிஜிட்டல் சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்ட முடிவில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாஜ எம்பி.க்கள் தங்கள் தொகுதிகளில் நடத்திய நடை பயணம் குறித்த அறிக்கை கேட்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: