10 ஆண்டுக்கும் மேலாக ஒரே பணியிடத்தில் பலர் தவிப்பு வனத்துறை அலுவலர் பதவி உயர்வில் முறைகேடு: அதிகாரிகள் ஆசியோடு சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி

சிறப்பு செய்தி: தமிழக வனத்துறை அலுவலர்கள் பதவி உயர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் ஒரே பணியிடத்தில் இருந்து, வயதிற்கும், தகுதிக்கும் ஏற்ற பதவி உயர்வு பெறமுடியாமல் திண்டாடி வருகின்றனர்.தமிழக வனத்துறையில் 42 வனக்கோட்டங்கள் உள்ளன. புலிகள் காப்பகங்கள் மற்றும் வன உயிரின காப்பகங்களும் தனித்தனியே பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறையை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவி வனபாதுகாவலர், வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனகாவலர்கள் என பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. இந்நிலையில் வனத்துறை ஊழியர்களுக்கு இப்பணியிடங்களுக்காக முறையான பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதில்லை. லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி கொட்டுபவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வுகள் தரப்படுகின்றன.

வனத்துறையை பொறுத்தவரை வனக்காவலராக முதலில் பணியில் சேரும் ஒருவர், பின்பு 4 ஆண்டுகள் கழித்து வனக்காப்பாளராக நியமிக்கப்படுவார். 8 ஆண்டுகள் கழித்து அவர் வனவர் பதவியை அடைவார். அதன் பின்பு அவர் வனச்சரகர், உதவி வனப்பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் என படிப்படியாக பதவி உயர்வுகளை பெறுவது வழக்கம்.இதில் கடந்த 2006 முதல் 2008 வரை வனக்காப்பாளர் பணியில் சேர்ந்தவர்கள் சுமார் 10 ஆண்டுகள் கடந்தும் வனவர் பணியிடங்களை பெற முடியாமல் திண்டாடுகின்றனர். வனவர் பணியிடங்களுக்கான பிளஸ் 2 கல்வித்தகுதி, அறிவியல் பாடத்தில் உரிய மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பலர் தமிழகம் முழுவதும் வனவர் பணியிடங்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். தமிழக வனத்துறையில் வழங்கப்பட்டு வரும் தாறுமாறான சீனியாரிட்டி முறையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.கடந்த 1980களில் இருந்தே வனங்களை பாதுகாக்க தோட்ட காவலர்கள், சமூக வன ஊழியர்கள் என்ற போர்வையில் சுமார் 5,544 பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் பலர் காடுகளை ஒட்டிய கிராமங்களில் வசிப்பவர்களாக இருந்தனர். வனக்காவலர் பணியில் சேர எஸ்எஸ்எல்சி கல்வித்தகுதி வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களில் 421 பேரை அரசு தேர்வு செய்து வனக்காவலர்களாக நியமித்தது. இதில் 171 பேர் 1995ல் வனக்காவலர்களாக பணியில் சேர்ந்தனர்.

இதற்கு எதிராக மற்றவர்கள் போர்க்கொடி தூக்கியதோடு, சீனியாரிட்டி அடிப்படையில் தங்களையும் வனக்காவலர்களாக நியமிக்க வழக்கு தொடர்ந்தனர். இதனால் 171 பேர் தவிர்த்து மற்றவர்கள் பணியில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் விளைவு கடந்த 8-3-1999ல் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டு, எழுத படிக்க தெரிந்த அனைவருக்குமே வனக்காவலர் பணியிடம் என்கிற வரைமுறையை உருவாக்கியது. அதன்படி அரசு ஏற்கனவே ேதர்வான 171 பேரை விட்டு விட்டு, புதிய சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்து வனக்காவலர் பணியிடங்களை நிரப்பி வந்தது. ஒவ்வொரு ஆண்டும் இதன் பேரில் நூற்றுக்கணக்கானோர் பணியிடம் பெற்றதால், வனத்துறையில் தகுதியும், திறமையும் உள்ளவர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் திண்டாடும் நிலை உருவானது.

பதவி உயர்வு கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்து வனக்காப்பாளர்கள் கூறுகையில், ‘‘வனத்துறையில் பிளஸ் 2 முடித்த பல வனக்காப்பாளர்களுக்கு வனவர் பணியிடம் கிடைப்பதில் ெதாடர்ந்து காலதாமதம் ஆகிவருகிறது. தோட்ட காவலர்களாகவும், சமூக வன ஊழியர்களாகவும் எப்போதோ இருந்தவர்கள், அந்த காலத்தில் இருந்தே வனத்தில் பணியாற்றி வருவதாக கணக்கு காட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வனக்காப்பாளர்கள், வனவர், வனச்சரகர் என பதவி உயர்வுகளை பெற்றுச் செல்கின்றனர். இதனால் தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை.

குறிப்பாக 2006 முதல் வனக்காப்பாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் இதற்குள் வனவர் என பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் வனத்துறையில் 99ம் ஆண்டு பட்டியல்படி சீனியாரிட்டியை நிரப்புகிறோம் என கூறிக்கொண்டு பதவி உயர்வுகள் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எழுத படிக்க மட்டுமே தெரிந்தவர்களுக்கு கீழ் டிகிரி வரை முடித்தவர்கள் பணியாற்ற வேண்டிய அவலமும் நிலவுகிறது. வனத்துறையில் தகுதியும் கவனிக்கப்படுவதில்லை. சீனியாரிட்டியும் பின்பற்றப்படுவதில்லை. அதிகாரிகளின் ‘ஆசி’ பெற்றவர்கள் மட்டுமே பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் பெற முடியும் என்ற நிலை காணப்படுகிறது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழக அரசு வனத்துறை பதவி உயர்வுகளில் உள்ள முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஓய்வூதிய திட்டத்திலும் பாதிப்பு

வனத்துறையில் தோட்ட காவலர்களாகவும், சமூக வன ஊழியர்களாகவும் முன்பு பணியாற்றியவர்கள், சீனியாரிட்டி பட்டியல் கோருவதோடு, இயல்பாகவே பழைய ஓய்வூதிய திட்டம் என்னும் பொக்கிஷத்திற்கான தகுதியையும் பெற்று விடுகின்றனர். 2004க்கு பின்னர் பணியில் சேருவோர் ஓய்வூதிய பங்களிப்பு திட்டத்தில் இணைந்து கஷ்டப்படுவதோடு, தங்களுக்கு கிடைக்க வேண்டிய சீனியாரிட்டியும் கிடைக்காமல் தவிப்பதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>