அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 91 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 91 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வி துறை  கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 4655.36 சதுர மீட்டர் பரப்பளவில், ₹7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கல்விசார் மற்றும் நிர்வாக கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலை கல்லூரி, சென்னை மாநில கல்லூரி, சென்னை நந்தனம், அரசு ஆடவர் கலை கல்லூரி, திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலூர், முத்துரங்கம் அரசு கலை கல்லூரி, காட்பாடியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி, கோவை, சேலம்,திருப்பூர், கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், நாகை மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணியாளர்கள் அறை மற்றும் கழிப்பறைகள் என மொத்தம் ₹90 கோடியே 91 லட்சத்து 88 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வி துறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பி.எம்.பிர்லா கோளரங்கத்தில், ₹10 கோடியில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கம் மற்றும் அறிவியல் கருவி ஆகியவற்றின் சேவையையும் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், தலைமை செயலாளர் சண்முகம், உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: