மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால் சென்னை நகரில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. வங்கக் கடலில் புயல் சின்னத்தால் சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் புயல் திசை மாறி சென்றதால் சென்னையில் மழை பெய்யவில்லை. சில நாட்கள் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்தது. இதுவரை சென்னையில் வடகிழக்கு மழை 41 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் சென்னையில் 29 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது. இந்த காலக்கட்டத்தில் 49 செ.மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும்.

இந்தநிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கடலூரில் 6 செ.மீ, திருச்செந்தூர் 5 செ.மீ, ஆலங்குடி 4 செ.மீ, வேதாரண்யம், அம்பாசமுத்திரம் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: