வந்தவாசி- செய்யாறு- வேலூர் வழித்தடத்தில் அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்

*பயணிகள் கோரிக்கை

செய்யாறு :  வந்தவாசி, செய்யாறு, வேலூர் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு 2வது பெரிய கோட்டமாகும். திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக 2ம் நிலை அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோட்டமாகும். இங்கு, செய்யாறு சிப்காட் ஆசியாவிலேயே 2வது பெரிய ஆலையான செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தொகுதியாகும்.

இந்நிலையில், செய்யாறு பணிமனை பஸ்கள் அனைத்தும் வேலூரில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக கும்பகோணம், புதுச்சேரி, திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டது. அதேபோன்று வேலூர் பணிமனையில் இருந்து ெசய்யாறு வழியாக வேலூர்- புதுச்சேரி, ஆற்காடு பணிமனையில் இருந்து வேலூர்- மேல்மருவத்தூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் செய்யாறு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவர வசதியாக இருந்தது.

அதேபோல், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லவும்,  திண்டிவனம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இணைப்பு பஸ்களை பிடிக்கவும், சிதம்பரம், சீர்காழி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக தலங்களுக்கு சென்று வர உதவியாக இருந்தன.  இந்நிலையில், செய்யாறு பணிமனையில் இருந்து கும்பகோணம், புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களும், வேலூர்- புதுச்சேரி, வேலூர்- மேல்மருவத்தூர் ஆகிய பஸ்களும் சில மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. 5க்கும் மேற்பட்ட பஸ்கள் சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டதால், ஆற்காடு வழியாக வேலூர் செல்ல முடியாமல் வந்தவாசி, செய்யாறு தொகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று அதிகாலையில் வந்தவாசியில் இருந்து செய்யாறுக்கும், இரவு 9 மணிக்கு மேல் செய்யாறில் இருந்து வந்தவாசிக்கும் செல்ல ஒரு பஸ் கூட இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, 5க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நேரங்களில் வந்தவாசி, செய்யாறு தொகுதி வழியாக வேலூருக்கு கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: