வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை 9 மாவட்டத்தில் கனமழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் புல்புல் புயல் உருவானது. தமிழகத்தில் இந்த புயல் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்,  புல்புல் புயல் மேற்கு வங்கத்துக்கு சென்றுவிட்டது. அதனால் ஏற்பட்ட வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை.

இருப்பினும், வெப்ப சலனம் காரணமாக தென்  மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, குன்னூரில் 170 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஒட்டப்பிடாரம் 140மிமீ, கோத்தகிரி 60மிமீ, மணிமுத்தாறு, பாபநாசம், ராஜபாளையம் 50மிமீ,  அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை 40மிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகிரி, மணியாச்சி, கடலூர், பரங்கிப்பேட்டை 30மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த  தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். இதுதவிர கோவை,  நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

Related Stories: