அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. மேலும், 3 மாதத்திற்குள் ராமர் கோயில் அறக்கட்டளையை அமைக்க வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு பொதுவாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் (All India Muslim Personal Law Board - AIMPLB) மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ஹசன் நத்வி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் முஸ்லிம் அமைப்பான பாபர் மசூதி நடவடிக்கை குழு மற்றும் சன்னி வகுப்பு வாரியம், அசாதுதீன் ஓவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொண்டன.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்பதா அல்லது வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா என்று ஆலோசிக்கப்பட்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் சீராய்வு மனு தயார் செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற மவுலானா அர்ஷத் மதானி கூறுகையில்; அயோத்தி தீர்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மறுசீராய்வு மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அது, 100% தள்ளுபடி செய்யப்படும் என தெரிந்தாலும், நாங்கள் மனுவை தாக்கல் செய்வோம். இது எங்கள் உரிமை என மவுலானா கூறியுள்ளார்.

Related Stories: