வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. இதனால், இந்தாண்டு வழக்கத்தை விட பருவமழை அளவு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. குறிப்பாக, சென்னையில் வெயில் வாட்டி எடுத்தது. ஆனால், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக நேற்று முன்தினம் சென்னை உள்பட தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. நேற்றும் தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால், பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், இன்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக்கடலில் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதனால் நாளை (இன்று) இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக உள் மாவட்டம், தென் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். குறிப்பாக 18ம் தேதி (நாளை), 19ம் தேதி (நாளை மறுநாள்) ஆகிய 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 20ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன்பின்னர், படிப்படியாக மற்ற பகுதிகளிலும் மழை அதிகரித்து காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, குலசேகரப்பட்டினம் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ, திருச்செந்தூர் 8 செ.மீ, வாஞ்சிமணியாச்சி 7 செ.மீ, கோத்தகிரி 6 செ.மீ, பவானி, ராதாபுரம், குன்னூர், மணிமுத்தாறு தலா 5 செ.மீ, பாபநாசம், போடிநாயக்கனூர், சிவகிரி, சாத்தான்குளம், தூத்துக்குடி, கொடைக்கானல் தலா 4 செ.மீ., சத்தியமங்கலம், கழுகுமலை, மயிலாடி, அம்பாசமுத்திரம், பெரியாறு, பெரியகுளம், ராமநாதபுரம் தலா 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: