ரயில் படிக்கட்டில் தொங்கினால் குரைத்து எச்சரிக்கும் பூங்கா ரயில் நிலையத்தை கலக்கும் நாய் ‘சின்னப்பொண்ணு’

* காவலர்களுடன் 24 மணி நேர ஷிப்ட்

* ஆச்சர்யத்துடன் பார்க்கும் பயணிகள்

சென்னை: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய், பயணிகள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் நாய்கள் சர்வ சாதாரணமாக வந்து சுற்றித்திரிவது வழக்கம், ஆனால் பூங்கா ரயில் நிலையத்தில் சுற்றிவரும் ஒரு நாய் ரயில் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்கள் மற்றும் ரயில் பயணிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனால் இந்த நாய்க்கு சின்னபொன்ணு என்று பெயர் வைத்துள்ளனர். பிளாட்பாரத்தில் படுத்து கிடக்கும் நாய், ரயில் வரும் போது எழுந்து நின்று பார்க்கும். அப்போது ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருகிறவர்களை பார்த்து குரைத்துக் கொண்டே பின்னால் ஓடும். இதனால் தினம் தினம் ரயில்களில் வருபவர்களுக்கு இந்த நாயை பற்றி நன்றாக தெரியும். பூங்கா ரயில்நிலையம் வந்ததும், தினமும் வருபவர்கள் உசாராக ரயிலுக்குள் சென்று விடுவார்கள். இது, ரயிலில் வரும் அனைத்து பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதனால்தான் என்னவோ அதற்கு காக்கிச்சட்டை காவலர்களை மிகவும் பிடிக்கிறது. அவர்கள் ரோந்து சென்றால் உடன் ரோந்துச் செல்வது, காவலர்களுடனே சுற்றுவது என வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் காவலர்கள் ரோந்து செல்லும் போது அந்த நாயையும் தன்னுடன் அழைத்து செல்வார்கள். அதை ஆசையுடன் அனைத்து காவலர்களும் ரோந்துக்கு அழைத்துச் செல்கின்றனர். மேலும், சின்னப்பொண்ணு நடைமேடை கடைவாசிகள் முதல் ரயில்வே காவலர்கள் வரை அனைவரின் அபிமானம் பெற்றதாக கூறுகின்றனர். அது பயணிகளுக்கு எப்போதும் எந்தவிதமான இடையூறு, தொந்தரவும் எதுவும் செய்வதில்லை. இதுகுறித்து, சென்னை பார்க் ரயில்வே போலீசார் கூறியதாவது:மின்சார ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்பவர்களையும், தண்டவாளங்களைக் கடந்து பிளாட்பார்ம்களில் ஏறுபவர்களையும் நாங்கள் எச்சரிப்பது வழக்கம். லத்தியை சுழற்றி ஓங்கி குரல் கொடுத்தும் பயணிகளை எச்சரிப்பதை கவனித்துக் கொண்டிருந்த சின்னப்பொண்ணு அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குரைத்து விரட்ட தொடங்கியது. தானாகவே அது பயிற்சி பெற்றுக் கொண்டது.

எதுவும் கற்றுக் கொடுக்காமலேயே அதுவாகவே வேலை செய்யும். அதிகாரப்பூர்வமாக ரயில்வே காவல் படையில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், தினமும் கடமை தவறாமல் பணியாற்றுகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காவலர்கள் பகல், இரவு என ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்த்தாலும், சின்னப்பொண்ணுக்கு மட்டும் 24 மணி நேர பணிதான். காவல்துறையினர் காக்கி உடையைப் பார்த்தால் போதும் அவர்கள் பின்னால் சென்று கடைசி வரை அவர்கள்கூடவே இருக்கும் என்றனர். இதுகுறித்து ரயில்நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது: ஒருமுறை பயணியிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற நபரை துரத்திப் பிடிக்க காவல் துறையினருக்கு உதவியது. வளர்த்தவர் யாரோ பராமரிக்க முடியாமல் இங்கு வந்து விட்டுள்ளார்.

ஒருமுறை ரயில் நிலையம் வந்த உரிமையாளரை அடையாளம் கண்டு அது பாசத்தில் ஒலி எழுப்பியபோது தான் அவரை நாங்கள் பார்த்தோம். அவர் சிதம்பரத்தை சேர்ந்தவர். வீட்டு உரிமையாளருடனான பிரச்னை காரணமாக ரயில்நிலையத்தில் விட்டுச் சென்றது தெரியவந்தது. இவ்வளவு நாள் கழித்து அவரை சரியாக அடையாளம் கண்டதுதான் ஆச்சர்யம். அவர்தான் அந்த நாயின் பெயர் சின்னப்பொண்ணு என கூறினார். மாதம் ஒருமுறை அவர் சென்னை வந்து சின்னப்பொண்ணை பார்த்து செல்கிறார் என்றனர். காவல் பணியில் உள்ள நாய்களுக்கு சம்பளம் உண்டு, பராமரிப்பு உண்டு. ஆனால் இந்த நாய்க்கு எந்த பராமரிப்பும் எதுவும் இல்லாமல் பணியை செய்கிறது.

Related Stories: