நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை: ஷெரீப்பின் உடல் நலனை வைத்து அவரது குடும்பம் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது... இம்ரான்கான் பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உள்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றும் அவரது உடல்நிலை சரியாகாததால், வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்கும்படி, நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

Advertising
Advertising

இதனால் அவரது குடும்பத்தினர், நவாஸ் ஷெரீப்பை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவரது பெயர் வெளிநாடு செல்வோருக்கான தடை பட்டியலில் இருந்தது. எனவே நவாஸ் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கும்படி அரசிடம் அனுமதி கேட்டனர். அரசு இதற்கு அனுமதி அளித்தது. ஆனால் தடை பட்டியலில் இருந்து அவரது பெயரை அரசு நீக்கவில்லை. இதன் காரணமாக நவாஸ் வெளிநாடு செல்வதில் சிக்கில் நீடித்து வந்தது. இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நவாஸ் வெளிநாடு செல்லும் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முடிவில் நவாஸ் ஷெரீப் ரூ.700 கோடி சொந்த பிணைத்தொகை செலுத்த வேண்டும், சிகிச்சை முடிந்தவுடன் நாடு திரும்பி ஊழல் வழக்கை எதிர்கொள்வேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனைகளுடன் நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல அனுமதி அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அரசின் இந்த நிபந்தனைகளை ஏற்பதற்கு நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். நவாஸ் கூறுகையில், “அரசின் இந்த நிபந்தனை சட்டவிரோதமானது. எனது உடல்நிலையை அரசு அரசியலாக்குகின்றது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் இம்ரான் கான் மற்றும் அவரது அரசு தான் இதற்கு பொறுப்பு. உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும்நிலையில் இந்த வாய்ப்பை அரசியலாக்க பயன்படுத்திக் கொள்கின்றது” என்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்  கட்சியின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே முக்கியம் என்றும் நவாஸ் ஷெரீப்பின் உடல் நலனை வைத்து அவரது குடும்பம் அரசியல் செய்வது வேதனை அளிப்பதாகவும் கூறினார். நிபந்தனைகளை நீக்கக் கோரி, நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Related Stories: