வணிகர்கள், பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் சமூகவிரோத கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : போலீஸ் கமிஷனரிடம் விக்கிரமராஜா மனு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில இணைச்செயலாளர் ஒய்.எட்வர்ட், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்ட இணைச்செயலாளர் ஏ.மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது, சென்னை தி.நகரில் தங்கநகை கடை அதிபரை மிரட்டி  பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பல் மீது உடனடி  நடவடிக்கை எடுத்ததற்காக கமிஷனர், காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியையும்,  பாராட்டையும் தெரிவித்து கொண்டார். மேலும், சந்திப்பின் போது விக்கிரமராஜா மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

சமீப காலங்களாக சென்னை நகரில் உள்ள  முக்கிய வணிக நிறுவனங்களையும், வணிகர்களையும் குறிவைத்து பிரஸ், மீடியா, பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், மனித உரிமை துறை நிர்வாகிகள் என்று போலியாக அடையாள அட்டை வைத்து கொண்டும், தங்கள் வாகனங்களில் அதற்குரிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு கும்பலாக சென்று மிரட்டுவதும், பணம் பறித்து வருவதும் தொடர் கதையாக உள்ளது. பல ஆண்டுகளாக இது போன்றவர்கள்  கடைகளை காலி செய்ய செய்வது, வீடுகளை காலி செய்யச் செய்வது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, ஆயுதங்களை காட்டி மிரட்டுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இக்கும்பல்களின் செயல்களால் வணிகர்களின் பாதுகாப்பும், வழக்கறிஞர்களின் கண்ணியமும், பத்திரிகையாளர்களின் கண்ணியமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இத்தருணத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் எதிராக செயல்படும் இதுபோன்ற சமூக விரோதிகளின் மீது கடுமையான  நடவடிக்கை எடுத்து,  வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: