சென்னை ஐஐடி மாணவி மரணம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை ஐஐடியில் எம்ஏ சமூகவியலாளர்  துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த  மாணவி பாத்திமா லத்தீப் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாணவி மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): சென்னை  ஐஐடியில் கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவ, மாணவியர்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):  மாணவி பாத்தி மாவின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மாணவி பாத்திமா தற்கொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணையை, தமிழக காவல்துறை நடத்தி, உண்மையை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்): பலியான மாணவி பாத்திமா குடும்பத்திற்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர்): ஐ ஐடி மாணவி பாத்திமா மரணம் குறித்து  நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்.

அஸ்லம் பாஷா(காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர்): படிப்பில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையல்ல. இதில் தொடர்புடைய பேராசிரியர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஜவாஹிருல்லா(மமக தலைவர்): மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு, அவரது மரணத்திற்குக் காரணமான சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்டோரைக் கைது செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ. தலைவர்): மாணவி பாத்திமா லத்தீபின்  மரணத்திற்கு காரணமாக கூறப்படும் பேராசிரியர்களை உடனடியாக பணியிடை நீக்கம்  செய்ய வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதுதொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): மதரீதியாக  பாரபட்சமாக செயல்பட்ட பேராசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்வதோடு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் :  மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல மே பதினேழு இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

Related Stories: