காவலர் பணி உடற்தகுதி தேர்வில் 3 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள் பணிக்கு அண்மையில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தூத்துக்குடியை சேர்ந்த சாரதா, தேன்மொழி, சென்னையை சேர்ந்த தீபிகா ஆகிய திருநங்கைகள் பங்கேற்றனர். தேர்வில் சாரதா 32 மதிப்பெண்ணும்,தேன்மொழி 30 மதிப்பெண்ணும், தீபிகா 35 மதிப்பெண்களும் எடுத்தனர்.இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வருவதால், தேர்ச்சி மதிப்பெண் 44 எடுக்க வேண்டும். அதை எடுக்காததால், உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. இதையடுத்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சீருடை தேர்வாணையம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி, ‘கடந்த 2015ம் ஆண்டு ஐகோர்ட் போலீஸ் பணியில் திருநங்கைக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பாக வழங்கிய விரிவான தீர்ப்பை ஏன் பின்பற்றவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ‘கடந்த 2017 டிசம்பர் 22ம் தேதி பிறப்பித்த அரசாணையின்படி, முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த திருநங்கைகள் அனைவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக கருதப்படுவார்கள். அவர்கள் உடல் நிலையை பொறுத்து ஆண், பெண் என்ற பிரிவின் கீழ் வருவார்கள். அந்த வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி.,) பிரிவின் கீழ் வரும் மனுதாரர்கள் 3 பேரும் உரிய மதிப்பெண் எடுக்கவில்லை’ என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தீட்சிதா, ‘மனுதாரர்களை கைவிடப்பட்ட விதவை பிரிவுகளின் கீழ் சேர்க்க வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘வருகிற 18ம்தேதி நடைபெற உள்ள உடல் தகுதி தேர்வில் மனுதாரர்கள் 3 பேரையும் அனுமதிக்க வேண்டும். உடல் தகுதி தேர்வில் மனுதாரர்கள் 3 பேரும் பெற்ற மதிப்பெண்களை வெளியிடக்கூடாது. அதை சீலிட்ட உறையில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.  மேலும், ‘மனுதாரர்கள் திருநங்கைகளாக மாறியது இயற்கையின் குற்றம். பெற்றோர் செய்த குற்றம் இல்லை. அப்படிப்பட்டவர்கள் இந்த சமுதாயத்தில் நல்லபடியாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் போலீஸ் வேலைக்கு வரும்போது, அதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Related Stories: