கேரள மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: சென்னை ஐஐடி பேராசிரியரிடம் போலீஸ் கமிஷனர் நேரடி விசாரணை

சென்னை: கேரளா மாணவி தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனிடம், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி கூடுதல் கமிஷனர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை ஐஐடியில் கேரளா மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப்(18) என்ற மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். வெளிமாநிலம் என்பதால் ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்தார்.இந்நிலையில், பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவியின் பெற்றோர் முறையாக விசாரணை நடைபெறவில்லை, இந்த தற்கொலையில் மர்மம் உள்ளது என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரளா முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவுடன் தற்கொலைக்கு முன் தனது மகள்

கடைசியாக செல்போனில் அனுப்பிய எஸ்எம்எஸ்சையும் இணைத்து வழங்கினார். பின்னர் அந்த புகார் மனுவை கேரளா முதல்வர்பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார். மாணவி தற்கொலை தற்போது இரண்டு மாநில விவகாரமாக மாறியுள்ளதால், தமிழக முதல்வரும் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முழுமையாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே மாணவி தற்கொலை கடிதத்தில் குற்றம்சாட்டிய பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் 3 நாட்களாக வெளியே சென்று இருந்தார். மாணவியின் கடிதத்தின் படி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீஸ் சார்பில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனுக்கு சம்மன் அனுப்பட்டது. அதன்படி பேராசிரியர் நேற்று காலை பணிக்கு திரும்பினார்.  இதையடுத்து விசாரணை அதிகாரிகள் யாரையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நம்பாமல், நேரடியாக நேற்று காலை சென்னை ஐஐடிக்கு சென்றார்.

அப்போது, மாணவி குற்றம் சாட்டிய பேராசிரியரிடம் தற்கொலை கடிதத்தில் உள்ள தகவலை நேரடியாக ைவத்து அடுக்கடுக்கான பல கேள்விகளை போலீஸ் கமிஷனர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பேராசிரியர் அளித்த பதில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. பிறகு தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்தீப் உடன் படித்து வரும் மாணவிகள் மற்றும் கேன்டீன் ஊழியர்கள், விடுதி ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இதுதவிர ஓராண்டு காலத்தில் 5 மாணவிகள் தற்கொலைக்கு என்ன காரணம், ஐஐடியில் மத ரீதியாக பாகுபாடு காட்டப்படுவது உண்மையா. ஐஐடியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு உள்ளனவா என்பது நேரடியாக ஆய்வு செய்து ஐஐடி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்.இரண்டு மணி நேரம் நீடித்த விசாரணையில் மாணவி தற்கொலைக்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அதிரடி விசாரணையின் போது, போலீஸ் கமிஷனருடன் இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி கமிஷனர் சுதர்சனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் கூறியதாவது:சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி பாத்திமா லத்தீப் இறந்தது தொடர்பாக சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். மாணவியின் தற்கொலை வழக்கு கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மெகாலினா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி சிபிஐயில் பணியாற்றியவர். கடினமான வழக்குகளை விசாரித்து திறம்பட செயலாற்றியவர். இந்த குழுவில் உள்ள உதவி கமிஷனர் பிரபாகரன் உள்ளார். இவரும் சிபிஐயில் பணியாற்றிய அனுபவம் உடையவர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து உண்மையை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். மாணவி தற்கொலை சம்பவம் சர்ச்சைக்குரிய விஷயமானதால் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடப்படவேண்டும் என்பதால் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் அமைப்பு அலைஅலையாக போராட்டம்

மாணவர்களின் தொடர் போராட்டங்களால் சென்னை ஐஐடி நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  போலீசாரின் தடையை மீறி இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக வந்து சென்னை ஐஐடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தமிழ்நாடு முஸ்லிம் மாணவர் பேரவை சார்பிலும் ஐஐடியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஹசன் ஆரூண் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஐஐடியை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் இளைஞர் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஐஐடி முன்பு நேற்று காலை முதல் இரவு வரை மாணவர்கள் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்ததால் அடையார் மற்றும் கிண்டி செல்லும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: