கொசு ஒழிப்பில் மெத்தனம்: 50 துப்புரவு பணியாளர் டிஸ்மிஸ் : வேலூர் மாவட்ட கலெக்டர் அதிரடி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனமாக இருந்ததாக 50 துப்புரவு பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர்  உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த வீடு, வணிக வளாக உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்காலிகமாக 1,936 துப்புரவு பணியாளர்கள் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இப்பணி சரியாக நடப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் கொசு ஒழிப்பு பணியில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்தார். ஆனாலும் கொசு ஒழிப்பு பணி மெத்தனமாகவே நடப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கொசு ஒழிப்பு பணியில், சரிவர செயல்படாமல் மெத்தனமாக இருந்த 50 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் கண்டறியப்பட்டனர். அந்த 50 பேரையும் டிஸ்மிஸ் செய்து கலெக்டர் சண்முகசுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Stories: