சொந்த ஒன்றியங்களிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற வாய்ப்பு

சென்னை: தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஒன்றியங்களில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு ஒன்றியங்களில் பணியாற்றும் நிலை உள்ளது. அதை மாற்றி தற்போது சொந்த ஒன்றியத்தில் பணியாற்ற தொடக்க கல்வித்துறை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வித்துறை இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து தொடக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை மாதம், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் பொதுமாறுதல் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு மாறுதல் பெற்றனர். ஆனால், அவர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை.

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு தகுதி இல்லாதவர்கள் என்றால் பழைய பள்ளியிலேயே தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மாறுதல் பெற்ற பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை காலியாக உள்ளது என கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். காலியாக உள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணைய தளம் மூலம் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகள்,  இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் ஆகியவற்றை ஒன்றியத்துக்குள் முடிக்க வேண்டும். அதற்கு பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்துக்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு கொடுத்து அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியத்தில் பணியாற்ற ஆன்லைன் கவுன்சலிங் மூலம் வாய்ப்பு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: