மே.வங்க புயல் பாதிப்பு பகுதியில் மத்திய அமைச்சர் வாகனம் முற்றுகை

நாம்கானா: மேற்கு வங்கத்தில் புல்புல் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோவின் வாகனம் முற்றுகையிடப்பட்டு அவருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தை புல்புல் புயல் புரட்டிப் போட்டது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாம்கானா, பாக்கலி, பிரேஜர்கஞ்ச் பகுதிகளின் வெள்ள பாதிப்பு நிலை பற்றி அறிய, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் பபுல் சுப்ரியோ சென்றார். அப்போது நாம்கானா பகுதிக்கு சென்றபோது அவரது வாகனத்தை வழிமறித்த மக்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர், அவர் பிரேஜர்கஞ்ச், பாக்கலி பகுதிகளுக்கு சென்றார். அங்கு வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், திரிணாமுல் மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. நாம்கானா பகுதிக்கு சென்ற போது எனது வாகனத்தை முற்றுகையிட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினர்’’ என்று குற்றம் சாட்டினார்.

₹50,000 கோடி இழப்பீடு கேட்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அதிகாரிகளுடன் முதல்வர் மம்தா ஆய்வு கூட்டம் நடத்தினார். புயலில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ₹2.4 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘புயல் தாக்கியதில் 15 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. புயல் காரணமாக சுமார் ₹50,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண உதவி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மாநில பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு முழு காப்பீடு கிடைக்கும்’’ என்றார்.

Related Stories: