ஏழைக் குழந்தைகளின் அன்னப்பிளவு சிகிச்சைக்கு சன் பவுண்டேஷன் 50.35 லட்சம் உதவி

ஏழைக் குழந்தைகளின் அன்னப்பிளவு குறைபாட்டைப் போக்குவதற்கான அறுவை சிகிச்சைக்கு சன் பவுண்டேஷன் ரூ.50.35 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மேல் உதட்டு அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் பவுண்டேஷன் 50.35 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, ஸ்மைல் டிரெயின் இந்தியா அமைப்பின் துணைத் தலைவர் மம்தா கரோல், மூத்த இயக்குநர் அஞ்சலி கட்டோச் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார்.

 இந்த நிதி உதவியின் மூலம் 265 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் இதுவரை ₹66 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: